“மிகச்சிறந்த சிந்தனையாளர் தன் சிந்த னையை நிறுத்திக்கொண்டார்,” என்று மாமேதை கார்ல் மார்க்சின் கல்லறையில் நிகழ்த்திய இரங்கல் உரையில் அவரது உற்ற தோழரும் மார்க்சிய மூலவர்களில் ஒருவருமான பிரெடெரிக் ஏங்கெல்ஸ் கூறினார். மார்க்ஸ் மறைந்து 137 ஆண்டுகள், ஏங்கெல்ஸ் காலமாகி 125 ஆண்டுகள் கடந்துவிட்டன. அவர்கள் இருவருமாகச் சேர்ந்து உருவாக்கி உலகிற்கு அளித்த ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ புத்தகம் வெளியாகி 172 ஆண்டுகளாகிவிட்டன. ஆனால், அந்தச் ‘சிவப்புப் புத்தகம்’ இன்றும் காலத்தை வென்று உயிர்ப்போடு, புத்துணர்ச்சியோடு இருக்கிறது. உலகத்தின் பிரச்சனைகளுக்கு, மனிதகுலத்தின் சிக்கல்களுக்கு நம்பகமான, திட்டவட்டமான தீர்வு காண்பதற்குச் சரியான வழிகாட்டிக்கொண்டிருக்கிறது. சமத்துவ சமுதாயத்தை அமைப்பதற்காகச் செயல்படத் தூண்டிக்கொண்டே இருக்கிறது. மார்க்ஸ் பின்னர் ‘மூலதனம்’ உள்ளிட்ட பல முக்கிய நூல்களை எழுதினார். ஏங்கெல்ஸ் பின்னர் குடும்பம், தனிச்சொத்து, அரசு உள்ளிட்ட நூல்களை எழுதினார். அவை அனைத்துக்குமே அடிநாதமாக அமைந்தது ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ நிர்ணயிப்புகள்தான்.
முதலாளித்துவ வர்க்கத்தின் புறப்பாட்டையும் போக்கை யும் ஆராய்கிற இந்நூல், அது “உற்பத்திச் சாதனங்களை மையப்படுத்தியுள்ளது. சொத்துகளை ஒரு சிலர் கையில் குவித்து வைத்துள்ளது,” என்று உரைக்கிறது. அன்று தொடங்கி இன்று வரையில் பொதுவுடைமை லட்சியத்தை மலினப்படுத்திக்கொண்டேதான் இருக்கிறார்கள் தனியுடைமைவாதிகள். அவர்களுக்கு இந்நூல் இவ்வாறு பதிலளிக்கிறது: “தனியார் சொத்துடைமையை ஒழித்துக்கட்டும் எங்கள் நோக்கம் கண்டு நீங்கள் திகிலடைந்திருக்கிறீர்கள். ஆனால் தற்போதைய உங்கள் சமுதாயத்தில் மக்கள் தொகையில் பத்தில் ஒன்பது பங்கினரின் தனிச்சொத்து டைமை ஏற்கெனவே ஒழிக்கப்பட்டுவிட்டது. ஒரு சிலரிடம் தனிச்சொத்து இருப்பதற்கு ஒரே காரணம் இந்தப் பத்தில் ஒன்பது பங்கினரின் கைகளில் அது இல்லாமல் ஒழிந்ததுதான்.”
ஆதாரமாய் ஓர் ஆய்வறிக்கை
1848ல் எழுதப்பட்ட இந்தக் கருத்து எவ்வளவு உண்மையானது என்பதை முன்னெப்போதையும் விட இன்றைய உலக நிலவரங்களும், உள்நாட்டுக் காட்சிகளும் காட்டுகின்றன. சில பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களும் உள்நாட்டுப் பெருநிறுவனங்களும் எல்லாத் தொழில்களையும் வளைத்துக்கொண்டு, சந்தையை ஆக்கிரமித்துப் பெருத்துக்கொண்டே போகின் றன. அந்தப் பெருக்கத்தில் எண்ணற்ற சிறு, நடுத்தர நிறுவனங்கள் மூச்சுத் திணறுகின்றன. உலகெங்கும் வேலையின்மையும், கிடைத்த வேலை நிலைக்குமா என்ற உத்தரவாதமின்மையும் பெரும்பகுதி உழைப்பாளிகளை அச்சுறுத்துகின்றன. உலக அளவில் செயல்படும் நிதி சேவை நிறுவனமான ‘கிரெடிட் சூய்சே’ என்ற அமைப்பு, 2017ம் ஆண்டு நிலவரம் பற்றிய தனது அறிக்கையில் உலக அளவில் ஏற்றத் தாழ்வான சொத்துடைமை பற்றித் தெரிவிக்கிறது. “உலகத்தின் மொத்த வருவாயில் 70.1 சதவீதம் உலக மக்கள் தொகையில் 2.7 சதவீதத்தினருக்குத்தான் போய்ச் சேர்கிறது. அதே வேளையில், உலக மக்கள் தொகையில் 85.6 சதவீதத்தினருக்கு உலகத்தின் மொத்த வருவாயில் 8.6 சதவீதம் மட்டுமே போய்ச் சேர்கிறது,” என்று அந்த அறிக்கை கூறுகிறது. அதற்கடுத்த இரண்டு ஆண்டுகளில் என்ன நிலைமை? இதே நிறுவனத்தின் 2019ம் ஆண்டு நிலவரம் பற்றிய அறிக்கை இவ்வாறு கூறுகிறது: “2019ம் ஆண்டின் இடைக்காலத்தில் உலக அளவில் சொத்துடைய மக்கள்தொகையில் கீழ்ப்பாதியில் இருப்போரின் மொத்தச் சொத்துடைமை 1 சதவீதத்திற்கும் குறைவானதே. பெரும் பணக்காரர்களாக உள்ள 10 சதவீதத்தினரிடம் உலகச் சொத்தில் 82 சதவீதம் இருக்கிறது. மிக உயர் மட்டத்தில் உள்ள 1 சதவீதத்தினரிடம் 45 சதவீத வளம் இருக்கிறது.”
இந்தியக் காட்சி
என்ன? உலகிலேயே மிகவும் சமத்துவமற்ற சமுதாயமாக இந்தியா இருக்கிறது என்று, அரசின் அதிகாரப்பூர்வ அமைப்பான தேசிய மாதிரி ஆய்வு (என்எஸ்எஸ்) தகவல் கள் உணர்த்துகின்றன. 2016ஆம் ஆண்டுக்கான அதன் அறிக்கையில், நாட்டின் ஒட்டுமொத்த சொத்துகளில் 28 சதவீதம் இங்குள்ள 1 சதவீதப் பணக்காரர்களிடம் இருக்கிறது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 1991ம் ஆண்டில் இந்த 1 சதவீதத்தினரின் கையில் இருந்தது மொத்த சொத்தில் 11 சதவீதம்தான். ஒரு குறுகிய பகுதியினரின் இந்தச் செல்வப் பெருக்கம் ஏதோ அவர்களது சொந்தத் திறனால் ஏற்பட்டதல்ல. அதன் விளைவான சமுதாய ஏற்றத்தாழ்வு தானாக விளைந்ததல்ல. இதன் பின்னணியில் செல்வக் குவிப்புக்கு உடந்தையாகச் செயல்படுகிற, வஞ்சிக்கப்படும் மக்களைக் கட்டுப்படுத்தி வைக்கிற அரசு என்ற ஏற்பாடு இருக்கிறது. “நவீன கால அரசின் நிர்வாக அமைப்பானது, ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கத்தின் விவகாரங்களை நிர்வகிப்பதற்கான ஒரு குழுவேயன்றி வேறல்ல,” என்று நம் சிவப்புப் புத்தகம் கூறுகிறது. ஆக, பொதுவாக நம்பப்படுவது போல ஒரு நாட்டின் அரசு எல்லோருக்கும் பொதுவானதாக இல்லை. அது முதலாளித்துவத்துக்குச் சேவை செய்கிற நிர்வாக அமைப்பாகவே செயல்படுகிறது. இந்த முதலாளித்துவ அரசமைப்பின் நாடாளுமன்றம், தேர்தல் போன்ற தவிர்க்கவியலா ஏற்பாடுகளும், அவற்றை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய நிலைமையும் வேறு பிரச்சனைகள்.
இந்தியாவின் நிதி நெருக்கடிச் சூழலில், மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வீழ்ச்சியடைந்துள்ள நிலைமை யில் இவற்றை சமாளிப்பதற்கான நேர் வழி மக்களின் வாங்கும் சக்தியை வலுப்படுத்துவதுதான். அதற்காக, பொதுத்துறை நிறுவனங்களின் சேவைகளை விரிவு படுத்துவதுதான். ஆனால் நடப்பது என்ன? தலைகீழாக, கார்ப்பரேட்டுகளுக்கு ஆண்டுதோறும் வரிச் சலுகைகள் அள்ளித்தரப்படுகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் சூறையாடப்பட்டுத் தனியாருக்கு அடிமாட்டு விலைக்கு விற்கப்படுகின்றன. முதலாளித்துவ வர்க்கத்தின் விவகாரங்களை நிர்வகிக்கிற குழுதான் நவீன அரசு நிர்வாகம் என்று மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் அன்று கூறியது இன்றும் பொருந்துகிறதே! இந்த ஏற்பாட்டை எளிய உழைப்பாளி மக்களை ஏற்கவைக்க, பல உத்திகள் கையாளப்படுகின்றன. “சட்டம், ஒழுக்கநெறி, மதம் என்றெல்லாம் பாட்டாளிக்கு எத்தனை முதலாளித்துவத் தப்பெண்ணங்கள் உள்ளனவோ (கற்பிக்கப்பட்ட), அத்தனை முதலாளித்துவ நலன்கள் அவற்றின் பின்னால் பதுங்கி மறைந்துகொண்டுள்ளன,” என்கிறது ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’. இந்தியாவில் இன்று மத்திய ஆட்சியாளர்கள் பாசாங்குத்தனமான தேசியவாதத்தை, பச்சையான மதவாத அரசியலாக கையாளுகிற காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. இங்கே கார்ப்பரேட் முதலாளித்துவமும் வகுப்புவாதமும் கைகோர்த்துக்கொண்டிருப்பது எப்படியென சிவப்புப் புத்தகத்தின் இந்த வரிகள் தெளிவுபடுத்துகின்றன. குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட ஒவ்வொரு நட வடிக்கையிலும் மக்களை மதவாதத்தால் பிளவுபடுத்தும் உள்நோக்கமும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பாசிச நிகழ்ச்சி நிரலும் மறைந்திருக்கின்றன, அந்த உள்நோக்கங்க ளின் பின்னால் கார்ப்பரேட் சுரண்டல் வேட்டை நலன்கள் பதுங்கியிருக்கின்றன.
மாற்றத்திற்கான மாற்றுக் கொள்கை
முதலாளித்துவ அரசமைப்பின் இந்தக் கள்ளத் தனத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்ததோடு புத்தகம் முடிந்துவிடவில்லை. அதற்கு உண்மையான, நம்பகமான மாற்றாக உழைப்பாளி வர்க்க அரசமைப்பு உருவாவது பற்றிச் சொல்லி, அதன் உடனடி நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்றும் வெளிச்சம் பாய்ச்சுகிறது. அந்த நடவடிக்கைகள் நாட்டுக்கு நாடு அதனதன் நிலைமைகள், தேவைகளையொட்டி மாறுபடும் என்றாலும் பொதுவாக நடைமுறைப்படுத்தக்கூடிய 10 கொள்கைகள் புத்தகத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. உரைகல்லாக 2, 6, 10 ஆகிய கொள்கைகளைக் காண்போம்:
“… 2. (அதிக வருமானத்துக்கு அதிக வரி விகிதம் என்ற அடிப்படையில்) கடுமையான வளர்வீத அல்லது படிநிலையான வருமான வரி விதிப்பு.
6. தகவல்தொடர்பு, போக்குவரத்துச் சாதனங்களை அரசின் கைகளில் ஒருசேர மையப்படுத்துதல்.
10. அனைத்துக் குழந்தைகளுக்கும் பொதுப் பள்ளிக்கூடங்களில் இலவசக் கல்வி அளித்தல் …”
-என்று அந்த மூன்று கொள்கைகளும் முன்மொழி யப்பட்டுள்ளன. இன்று இந்தியாவில் அதிக வருமானப் பிரிவினராகிய கார்ப்பரேட்டுகளுக்கு வரி விகிதம் குறைக் கப்படுவது, தகவல்தொடர்பு அமைப்புகளும் ரயில்வே உள்ளிட்ட போக்குவரத்துக் கட்டமைப்புகளும் தனியார் புகுந்துவிளையாடுகிற களமாக்கப்படுவது, தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் பொதுப்பள்ளிகள் என்ற அடித்தளமே தகர்க்கப்படுவது போன்ற சூழ்ச்சிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ முன் மொழிகிற இந்தக் கொள்கைகள் எவ்வளவு உன்னதமா னவை, மிகத் தேவையானவை என்பது புரியும்.
சமுதாயமே மேடுபள்ளமாக்கப்பட்டிருக்கிற நிலைமை களுக்கு முடிவுகட்ட, மனிதர்களின் நியாயமான சமத்துவக் கனவுகள் நிறைவேற என்ன செய்ய வேண்டும்? சோசலிசமே உறுதியான, இறுதியான தீர்வு என்ற தெளிவு பிறக்க வேண்டும். “இதுநாள் வரையில் நிலவிவந்துள்ள சமுதாயத்தின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும்,” என்றுதான் இப்புத்த கத்தின் முதல் அத்தியாயமே தொடங்குகிறது. அதற்கேற்ப அநீதிகளுக்கு எதிரான போராட்டங்கள் வர்க்கப் போராட்டமாக அணி திரள வேண்டும். “முதலாளித்துவ வர்க்கத்தின் வீழ்ச்சியும் பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியும் சம அளவில் தவிர்க்கவியலாதவை ஆகும்,” என்கிறது சிவப்புப் புத்தகம். இது வெறும் அனுமானமல்ல. அறிவியல்பூர்வமான கண்டுபிடிப்பு. பாகுபாடுகளுக்கும் அவலங்களுக்கும் முத லாளித்துவம் – அது எவ்வளவு நவீன வடிவமெடுத்தாலும் – தீர்வாகாது என்ற உலகளாவிய அனுபவத்தால் நிரூ பிக்கப்பட்ட நிர்ணயிப்பு. உலகம் முழுவதும், ஒவ்வொரு நாட்டிலும் சமுதாய சமத்துவ மாற்றங்களுக்காகக் கள மிறங்கியிருக்கிற கம்யூனிஸ்ட்டுகளுக்கும் முற்போக்கா ளர்களுக்கும் மனிதநேயர்களுக்கும் இந்த நிர்ணயிப்பு உந்துசக்தியாக இருக்கிறதென்றால் மிகையில்லை.
அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான புரட்சி தொழி லாளி வர்க்கத்தின் தலைமையில் நடைபெறும் என்று கூறிய அதே நேரத்தில் தொழிலாளி வர்க்கத்திற்கு யார் வழிகாட்டுவார்கள் என்பதையும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை தெளிவாக குறிப்பிட்டுள்ளது: “கம்யூனிஸ்ட்டுகளின் உடனடி நோக்கம், பாட்டாளி களை ஒரு வர்க்கமாக கட்டியமைத்தல், முதலாளித்துவ மேலாதிக்கத்தை வீழ்த்துதல், பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்றெடுத்தல் ஆகியவை தாம்”.
ஆஸ்கர் விழாவில் அந்த அறைகூவல்
உலகத்தை மாற்றும் வல்லமை உழைப்பாளி வர்க்கத்தின் ஒற்றுமைக்கே இருக்கிறது. ஆகவேதான் இந்தப் புத்தகம் “உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்” என்ற அறைகூவலோடு நிறைவடைகிறது. இந்த அறைகூவல் எவ்வளவு அர்த்தமுள்ளது என்பதற்கு ஒரு சிறிய, சமீபத்திய சான்று ஒன்றைக் காணலாம். சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் விருதைப் பெற்றுக்கொண்ட ஆவணப் படத்தின் இணை இயக்குநர் ஜூலியா ரெய்ச்செர்ட் தனது ஏற்புரை யில், “உழைக்கும் மக்களின் நிலை இந்நாட்களில் மேலும் மேலும் கடுமையாகிக்கொண்டிருக்கிறது. உலகத் தொழிலாளர்கள் ஒன்றுபடுகிறபோது இந்த நிலைமை சீரடையும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றார். மார்க்சிய ஆசான்கள் விடுத்த அந்த அறைகூவல் எங்கெல்லாம் எதிரொலிக்கிறது!
1848 பிப்ரவரி 21 அன்று ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ முதல் படி லண்டனில் வெளியிடப்பட்டது. அதை நினைவு கூர்ந்து இவ்வாண்டு இந்த பிப்ரவரி 21ல் உலகம் முழுவதும் சிவப்புப் புத்தக வாசிப்பு இயக்கம் நடைபெறுகிறது. இந்தியாவில் இதைச் செயல்படுத்துவதற்கென்று, புத்தகத்தை மறுபதிப்புச் செய்து வெளியிட, புதுதில்லியில் நடைபெற்ற இடதுசாரிப் பதிப்பகங்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தமிழகத்தில் பாரதி புத்தகாலய முயற்சியில் ஒரு லட்சம் படிகள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அத்தனை பேரையும் இப்புத்தகம் சென்றடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் பல இடங்களில் இந்த வாசிப்பு இயக் கத்திற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இணைந்து போராடுவது போல சேர்ந்து வாசிப்போம்.
வாசிக்க வாசிக்க வரலாறு தெளிவாகும், புதிய வரலாறு வசப்படும்!